Sunday, November 11, 2007

ரிலையன்ஸ

1985ம் வருட மேதினம் இந்தியாவில் காம்ரேடுகளால் கம்ப்யூட்டர் எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்பட்டது. அப்போது ராஜிவ் காந்தி ஓரளவு சீர்திருத்தங்களை செய்து கொண்டிருந்தார். கம்ப்யூட்டர்கள் இந்தியாவில் புழங்க துவங்கியிருந்தன. அப்போது நம் காம்ரேடுகள் "10 ஆள் வேலையை ஒரே கம்ப்யூட்டர் செய்வதால் ஒரு கம்ப்யூட்டர் விற்றால் 10 பேருக்கு வேலை போகும்" என்ற லாஜிக்கை முன்வைத்து 1985 மேதினத்தை கம்ப்யூட்டர் எதிர்ப்பு தினமாக கடைபிடித்தனர்.

காம்ரேடுகளை தப்பு சொல்லி பிரயோஜனமில்லை. அவர்கள் அறிவு உலக்கை கொழுந்து என்பது அனைவருக்கும் தெரிந்த விசயம்தான். ஒப்பாரி வைப்பதையே தொழிலாக கொண்ட காம்ரேடுகளுக்கு நாடும் தொழில்துறையும் அடையும் ஒவ்வொரு முன்னேற்றமும் பின்னேற்றமாக தெரிவதில் வியப்பில்லை. ப்ளாஸ்டிக் தொழில்துறை முன்னேறினால் இவர்கள் அம்பானி பணக்காரனாகிறான் என வருத்தப்படுவார்கள். சாப்ட்வேர் துறை முன்னேறினால் இவர்கள் நாராயணமூர்த்தி கோடிஸ்வரனாகிறார் என வருத்தப்படுவார்கள். சாப்ட்வேர் துறையில் ஐந்திலக்க சம்பளம் தரப்பட்டால் இவர்கள் கலாச்சாரம் சீரழிகிறது என சத்தம் போடுவார்கள்.

சென்னையில் பஸ்கண்டக்டர்களுக்கு 25% போனசும், 30% சம்பள உயர்வும் வேண்டும் என கொடிபிடிப்பார்கள்.கேட்கும் சம்பளத்தை கொடுத்து பேருந்து கட்டணத்தை உயர்த்தினால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என அதற்கும் சண்டை கட்டுவார்கள். தேங்காய் விலைகுறைந்தால் விவசாயி பாதிக்கப்படுகிறான் என ஊர்வலம் போவார்கள். தேங்காய் விலை உயர்ந்தால் விலைவாசி உயர்ந்துவிட்டது என ஊர்வலம் போவார்கள்.

கரும்புக்கு கொள்முதல் விலையை அதிகரிக்க கும்பகோணத்தில் போராடுவார்கள். அதேசமயம் சர்க்கரை விலையை குறைக்கும்படி சென்னையில் போராடுவார்கள். பால்காரர்களுக்கு கொள்முதல் விலையை அதிகரிக்க கொடிபிடிப்பார்கள். பால் விலை உயர்ந்தால் அதற்கும் கொடிபிடிப்பார்கள். அதனால்தான் இவர்கள் அனைத்து தரப்பிலும் மிக பாப்புலராக இருக்கிறார்கள்.

இவர்களின் இரட்டை வேடத்தை பேசிக்கொண்டு இருந்தால் நாள்போவதே தெரியாது என்பதால் இப்போது ரிலையன்ஸ் விஷயத்துக்கு போகிறேன். ரிடெய்ல் துறை முன்னேறினால் தான் ஒரு நாடு முன்னேறுகிறது என்று அர்த்தம். இந்தியாவில் முட்டாள்தனமான கம்யூனிச கொள்கைகளை இத்தனை நாள் பின்பற்றி வந்ததால் இத்துறை இன்று நோய்வாய்ப்பட்டு காட்சி அளிக்கிறது. இந்தியாவின் ஜனத்தொகைக்கும், வளர்ச்சிக்கும் ஈடுகொடுக்கும் விதத்தில் இத்துறை வளர்ந்திருக்கிறதா என்றால் இல்லை.ரிடெய்ல் வளர்ச்சி இன்றி தொழில்துறை முன்னேற்றமும், விவசாய துறை முன்னேற்ரமும் சாத்தியமில்லை எனும்போது ரீடெயில் துறையை நவீனப்படுத்துதல் எத்தனை அத்யாவசியமானது என்பது சொல்லாமலே விளங்கும்.

இந்தியாவில் 40% விவசாய விளைபொருட்கள் சந்தையை தொடுமுன்னரே அழுகி வீணாகின்றன. இந்திய விவசாயிக்கு சிறுவணிகரால் விளைச்சலுக்கு தகுந்த விலையும், குளிர்பதனம், போக்குவரத்து, கடனுதவி போன்ற எந்த உதவியையும் இதுவரை செய்துகொடுக்க முடிந்ததில்லை. சிறுவணிகரை இதற்காக நான் குற்றம் சொல்லவில்லை. அவர்களுக்கு இருக்கும் பொருளாதார சிக்கலில் இதற்கு எல்லாம் அவர்களிடம் வசதியோ, அடிப்படை கட்டமைப்போ கிடையாது. வாங்குபவனும் ஏழை, விற்பவனும் ஏழை எனும் நிலை நீடிக்கும் துறையில் வளர்ச்சி எப்படி இருக்கும்?


ரீடெயில் வலர்ந்தால் விவசாயம் வளரும் என்றால் "விவசாயிகள் 10 லட்சம் பேர் தற்கொலை செய்து கொண்டார்கள். அப்போது எங்கே போனீர்கள்?" என்று காம்ரேடுகள் புலம்புவார்கள். 40% விளைபொருள் நாசமாவதை தடுப்பதையும், விலைபொருளுக்கு புதிய சந்தையை ஏற்படுத்துவதையும், விலைபொருளுக்கு அதிக விலை கிடைப்பதையும் செய்தால் விவசாயம் செழிக்கும், தற்கொலைகள் மறையும் என்பதும் அதை செய்ய ரீடெயில் துறையில் ஆர்கனைஸ்ட் செக்டார் நுழையவேண்டும் என்பது இவர்களுக்கு தெரியுமா தெரியாதா என்பது விளங்கவில்லை.


ரீடெய்லும், உற்பத்தியும், விவசாயமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை.இவற்றில் ஏதாவது ஒன்று சரியில்லை என்றாலும் மற்ற அனைத்தும் வீழும்.சுருக்கமாக சொன்னால் ரிடெய்ல் துறை முன்னேறாவிட்டால் மக்களின் முன்னேற்றம் என்பதும் வெறும் கனவாகவே போய்விடும்.

சில உதாரனங்கள் மூலம் விளக்குகிறேன். ரீடெய்ல் துறை ஆர்கனைஸ்ட் செக்டாரின் கையில் இருக்கும் நாடுகளில் கன்ஸ்யூமருக்கு (காம்ரேடுகள் கன்ஸ்யூமர் = மக்கள் என்று படித்துக்கொள்ளுங்கள்) விலைவாசி குறைவு, போக்குவரத்து செலவு மிச்சப்படுதல், நேரம் சேமித்தல் என்று பல லாபங்கள் ஏற்படுகிறது. பள்ளிபாட புத்தகங்கள் முதல் மளிகைபொருட்கள் வரை அனைத்தையும் வீட்டிலிருந்தே வாங்கக்கூடிய ஆன்லைன் வர்த்தகத்தால் மக்களுக்கு எத்தனை நேரச்செலவும், அலைச்சலும், விலையும் மிச்சப்படுகிறது?அன் ஆர்கனைஸ்ட் ரீடெயில் துறையால் மக்களுக்கு இந்த வசதிகளை எல்லாம் செய்துதரவே முடியாது.அதற்காக அவர்களை குற்ரம் சொல்வதில் அர்த்தம் இல்லை. சந்தைபொருளாதாரத்தில் அவர்கள் பங்கு வேறுவிதமானது. ஆர்கனைஸ்ட் ரீடெய்ல் செக்டாரால் தான் மக்களுக்கு இப்படி காசையும், நேரத்தையும் மிச்சப்படுத்த முடியும். பெட்டிக்கடை வைத்திருக்கும் அண்ணாச்சியும் மகனுக்கு புஸ்தகம் வாங்க, கடைக்கு கொள்முதல் செய்ய இனையத்தை பயன்படுத்த முடியும்.இதனால் எல்லாரும் பயனடைவார்களே தவிர யாருக்கும் நஷ்டமில்லை.

இந்தியாவில் எத்தனை பேரிடம் இனைய வசதி இருக்கிறது, அண்னாச்சிக்கு கம்யூட்டரை இயக்க தெரியுமா என்றெல்லாம் அர்த்தம் கெட்ட வகையில் காம்ரேடுகள் இதற்கு விளக்கம் கொடுப்பார்கள். அந்த துறை வளர, வளர கம்ப்யூட்டர்கள் உபயோகம் அதிகரிக்கும். விலை குறையும். கால்குலேட்டர், டீவி ரேடியோ போல் பாமரர்களும் பயன்படுத்தும் வகையில் கணிணியின் உபயோகம் அதிகரிக்கும்.25 வருடத்துக்கு முன் கோடிஸ்வரர்கள் வீட்டில் தான் டீவி இருந்தது. இன்று குடிசையில் கூட இருக்கிறது. கம்ப்யூட்டருக்கும் வருங்காலத்தில் இதுதான் நடக்கும்.

உலகெங்கும் ஆன்லைன் ரீடெய்ல் வர்த்தகத்தில் 2005ல் 143 பில்லியன் டாலர் புழங்கியது. 2004ஐ விட 2005ல் இது 24% அதிகம். இந்தியாவில் இத்துறை இன்னும் நோய்வாய்ப்பட்ட நிலையிலேயே இருக்கிறது. ரீடெய்ல் துறையில் பெரும்கம்பனிகள் நுழையாவிட்டால் நிலைமை எத்தனை வருடம் ஆனாலும் இப்படியே தான் இருக்கும். இந்த 143 பில்லியன் டாலரில் (ஐந்தரை லட்சம் கோடி ரூபாய்) வெறும் ஐந்து சதவிகிதத்தை இந்தியா பிடித்தால் தொழில்துறையிலும், உற்பத்திதுறையிலும் பல லட்சம் வேலைகள் புதிதாக உருவாகுமே அன்றி குறையாது.

ஆன்லைன் வர்த்தகத்தால் ஏழைக்கு என்ன லாபம் என்று கேட்டால் 'நுகர்வு உயர, தொழில் உயரும், தொழில் உயர தொழிலாளி உயர்வான்' என்று சிம்பிளாக அவ்வையார் பாணியில் பதில் அளிக்கலாம்.நுகர்வு உயர வேலைவாய்ப்புகள் உயரும் என்பது புரிய நாம் பெரிய புத்திசாலியாக இருக்க வேண்டியதில்லை. பொருளாதாரத்தின் அடிப்படை தெரிந்த எல்லோருக்கும் இதுவும் புரியும். இதுபுரிந்தால் ஆன்லைன் வர்த்தகத்தால் 'ஏழைக்கு என்ன பயன்' என புலம்ப மாட்டோம்.

இந்தியாவில் இப்போது 3.7 கோடி மக்களிடம் இனைய தொடர்பு வசதி இருக்கிறது. குடும்பத்துக்கு நாலு பேர் என்று வைத்துக் கொண்டாலும் சுமார் 12 கோடி பேர் (இந்தியாவின் அதிக வருமானம் ஈட்டும் குடும்பங்கள்) ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடக்கூடிய பொடன்ஷியல் இருக்கிறது. இந்த 12 கோடி எனும் தொகை பல உலக நாடுகளின் ஜனத்தொகையை விட அதிகம் என்பதும் இந்தியாவில் இனையத்தொடர்பு ராக்கட் வேகத்தில் அதிகரித்து வருவதும் இங்கே குறிப்பிடத்தக்கவை. தொலைதொடர்பு, கணிணித்துறை, அடிப்படை கட்டுமானம் ஆகியவை அதிகரிக்க அதிகரிக்க இந்த வளர்ச்சி மேலும் பல மடங்கு அதிகரிக்குமே தவிர குறையாது. ஆக சாலிடான ஒரு அடிப்படை இருக்க அதை பயன்படுத்தி தொழில்துறையையும், நுகர்வையும் வளர்க்காமல் "இன்டர்னெட் வர்த்தகம் வந்தால் பெட்டிக்கடைகாரனும், தள்ளுவண்டிக்காரனும் பாதிக்கப்படுவான்" என்று புலம்புவதில் அர்த்தமே இல்லை.

ஆன்லைன் வர்த்தகம் வளர்ந்தால் இந்தியாவில் இன்டெர்னெட் பிரவிசிங் சென்டர்கள் மிக அற்புதமான ரீடெய்ல் வணிக சென்டர்களாக மாறக்கூடிய சாத்தியமும், அதனால் கணிணி இயக்க தெரியாதவர்கள் கூட ஆன்லைன் கன்ஸ்யூமர்களாக மாறும் சாத்தியமும் தாராளமாக உண்டு. எஸ்டிடிபூத்கள் சிறுவணிக மையங்களாக மாறியது போல் ஆன்லைன் வர்த்தகம் வந்தால் பிரவுசிங் சென்டர்கள் டிவி,ரேடியோ, வாஷிங் மெஷின் விற்கும் நிலையங்களாக மாறும் சாத்தியமும் மறுப்பதற்கில்லாதது.

மாட்டின் கண்ணை பட்டை வைத்து கட்டியது போல் இது எதையும் பார்க்காமல் 1985ல் நடந்தது மாதிரி மிகப்பெரும் வேலைவாய்ப்புகளையும் வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகளையும் கொண்டுவரவிருக்கும் ஒரு துறையை வழக்கம் போல் காம்ரேடுகள் எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். வரலாறு வழக்கம்போல் கம்யூனிசத்தின் புரட்டுகளை கட்டவிழ்க்கும்

No comments: